குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்தார் மொரீசியஸ் பிரதமர்!
மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதனை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில், திருப்பதி வெங்கடேசுவரா கோவில், மற்றும் ராஜ்கோட் மகாத்மா காந்தி நினைவிடம் ஆகிய இடங்களுக்கு வருகை புரிந்தார்.
இந்த நிலையில் இன்று மொரிஷியஸ் பிரதமர் ராம்கூலம், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
மேலும் இச்சந்திப்பில் இந்தியாவிற்கும் மோரீஷஸுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மொரிஷியஸ் பிரதமர் ராம்கூலம் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இந்திய துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் ராம்கூலம் ஆவார்.
இச்சந்திப்பில், இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.