தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடத்தில் இன்று (பிப். 27) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழ்மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மொழி தமிழ். திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. எந்த வளர்ச்சியுமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் திமுக எதையும் தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொடுக்கப்பட்டதை விட தேசிய ஜனநாயக கூட்டணி 3 மடங்கு அதிக நிதி கொடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜகவில் பலம் அதிகரிக்கும். தமிழகத்தில் பாஜகவின் மீது பெரும் நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இல்லாவிட்டாலும், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜகவின் வளர்ச்சியை தடுக்கின்றனர். ஏழை மக்கள் அனைவருக்குமானதாக பாஜக செயல்படுகிறது எனக் குறிப்பிட்டார்.