நாடாளுமன்ற தாக்குதல் தினம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001-ம் ஆண்டு டிச.13-ம் தேதி லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய குழுக்களைச் சேர்ந்த 5 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் டெல்லி போலீசார் 5 பேர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் ஒருவர், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளர்கள் 2 பேர் மற்றும் செய்தியாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள்: ’21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக ஏஐ-யை மாற்ற முடியும்’ – பிரதமர் நரேந்திர மோடி!
தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடைபெற்று இன்று 22-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.