அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும். ஆனால், பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது, அவர் பேசும்போது, "கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.