“ஸ்மிருதி இரானி உள்பட எந்தவொரு தலைவரையும் அவமதிக்கக் கூடாது” - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தல்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார். அவர் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார். முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.
Such is life... A decade of my life going from one village to another, building lives, nurturing hope & aspirations, working on infrastructure ― roads, naali, khadanja, bypass, medical college and more.
To those who stood by me through loss and victory, I am forever grateful. To…
— Smriti Z Irani (@smritiirani) June 4, 2024
ஸ்மிருதி இரானி தனது தோல்விக்கு பின்னர் ஜூன் மாதம் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில், “இதுதான் வாழ்க்கை. எனது வாழ்க்கையில் பத்து ஆண்டுகள் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு பயணம் செய்து, வாழ்க்கையை உருவாக்கி, நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை வளர்த்து, சாலைகள், வடிகால்கள், புறவழிச்சாலைகள், மருத்துவக்கல்லூரிகள் இன்னும் பல உள்கட்டமைப்புகளை உருவாக்கினேன். எனது வெற்றி மற்றும் தோல்விகளில் என்னுடன் நின்றவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.
மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானியின் தோல்விக்குப் பிறகு அவர் மீது சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஸ்மிருதிக்கு எதிரானவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,
Winning and losing happen in life.
I urge everyone to refrain from using derogatory language and being nasty towards Smt. Smriti Irani or any other leader for that matter.
Humiliating and insulting people is a sign of weakness, not strength.
— Rahul Gandhi (@RahulGandhi) July 12, 2024
“வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் நிகழ்வதுதான். ஸ்மிருதி இரானி அல்லது வேறு அந்த தலைவருக்கு எதிராகவும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் மோசமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு நான் ஒவ்வொருவரையும் வேண்டிக்கொள்கிறேன். ஒருவரை அவமானப்படுத்துவது மற்றும் இழிவுபடுத்துவதும் பலவீனத்தின் அடையாளம். அது பலம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்மிருதி இரானி டெல்லியில் உள்ள 28, துக்ளக் கிரசண்ட்-ல் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை புதன்கிழமை கிழமை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.