“நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” - பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
நாடாளுமன்றக் குழுத் தலைவராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகள், வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
தேசத்தின் நலனே முதன்மையானது. அதில் ஒருபோதும் சமரசம் இல்லை. பாஜக அரசு மீது பழங்குடி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தான் அவர்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 8 மாநிலங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் காத்திருக்கிறார்கள். நாட்டு மக்கள் 24 மணி நேரமும் என்னை அணுகலாம்.
அனைவருக்குமான ஆட்சியை நடத்துவது என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து தான் முக்கியம், பெரும்பான்மை அல்ல. அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போது தான் தெரிகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.