மிமிக்ரி விவகாரம்: தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் - மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 151 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிச.19) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திரிணமுல் காங்கிரஸின் எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் இதனை வீடியோ எடுத்தார்.
கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்துக்கும் அவமானமாகும்.
குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை சபாநாயகரை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணைநின்ற இதர எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.