”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” - NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைய விவாதம் நடந்துள்ளது. மாநில அரசு எடுக்க வேண்டுமா? மத்திய அரசு எடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசப்பட்டது. தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஎஸ் தேர்வு முறையில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு எதிர்ப்பாக எதையாவது சொல்லும். கேரளா எல்லையில் துறைமுகம் திறக்கப்பட்டதால் நமக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக துறைமுக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யின் தவெக கட்சியை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தபோது, “தேர்தல் வர இன்னும் ஒரு வருடம்
இருக்கிறது. அப்போது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திருவல்லிகேணியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்தது. தமிழ்நாடு அரசு எல்லாவற்றிக்கும் தடை விதிக்கிறது”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.