#JammuKashmir சட்டமன்றம் | வெற்றி பெற்றவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள்!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 90 பேரில் பாஜகவை சேர்ந்த ஒருவர், மற்றும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவாகியுள்ள வாக்குகள் நேற்று (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆரம்ப கட்டத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவியது. இருப்பினும், பிற்பகலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த இந்தியா கூட்டணியானது 48 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 41 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதில், ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவை சேர்ந்த ஷகுன் பரிஹார் என்ற பெண் உறுப்பினர், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஷமிமா பிர்தௌஸ் மற்றும் சகினா இடூ ஆகிய 2 பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3.33% மட்டுமே ஆகும்.
இந்தியா கூட்டணி சார்பில் மொத்தம் 30 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இக்கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 48 வேட்பாளர்களில் மொத்தம் 2 இந்து வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதேபோல், பாஜக சார்பில் 28 இந்து மற்றும் ஒரு சீக்கிய உறுப்பினர் அடங்கிய 29 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.