திருப்பரங்குன்றம் விவகாரம் - நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் பிறப்பித்திருந்த 144 தடை உத்தரவையும் ரத்து செய்தது. இதனை அடுத்து மனுதாரர் மலை மீது தீபம் ஏற்றி கொள்ளலாம் என்றும் அதற்கு மாநகர காவல் ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று மனுதாரர் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது போலீசார் அவர்களை மலைப்பாதையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, அமிர்த பிரசாத் ரெட்டி மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 11.20 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 நபர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.