”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!
கடந்த ஆகஸ்ட் 1 அன்று பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா? சத் பூஜை விழாவின்போது புலம்பெயர் தொழிலாளர்கள், பிகாருக்குச் செல்கிறார்கள்தானே? வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிகாரில் அல்லது அவரின் சொந்த மாநிலத்தில் வீடு உள்ளது. அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்? பிகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து அங்கு வாழ்ந்துவரும் சூழ்நிலையில் அவர்களை தமிழ்நாட்டில் "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று எவ்வாறு கருத முடியும்? தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்"
என்று தெரிவித்துள்ளார்.