தமிழ்நாட்டில் காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என பகிரப்படும் பதிவு உண்மையா?
This news Fact checked by 'Logically Facts'
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என பகிரப்படும் பதிவு பொய்யான தகவல்களுடன் பகிரப்படுவதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா என்பது ஒரு ஆராய்ச்சி மற்றும் கருத்துக் கணிப்பு நிறுவனமாகும், இது இந்தியா டுடே குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் வெளியேறும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகிறது. அதேபோல், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 13 முதல் 15 இடங்களில் வெற்றி பெறும் என்று ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பு என Aaj Tak நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் தமிழகத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து இந்தியா டுடேயும் வெளியிட்டது.
- பாஜக : 2-4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு
- காங்கிரஸ் : 13-15 இடங்களை வெல்ல வாய்ப்பு
- திமுக: 20-22 இடங்களை வெல்ல வாய்ப்பு
- அதிமுக: 0-2 இடங்களை வெல்ல வாய்ப்பு
பல ட்விட்டர் (எக்ஸ்) பயனர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். அதில் ஒருவர், “Big Breaking ➡ தமிழ்நாடு நரேந்திர மோடியின் Goddi Media Exit Poll இன் உண்மை நிலையைப் பாருங்கள் #ExitPoll”.
இது போன்ற பதிவுகள் அசாமிய மொழியில் பகிரப்பட்டுள்ளன. அதன் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, ஒரு பேஸ்புக் பயனர், “வெளியேறும் கருத்துக்கணிப்புகளுக்காக கள ஆய்வுகள் நடத்தப்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். கருத்துக் கணிப்புகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அவர்கள் 13 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என கணித்துள்ளனர்” இவ்வாறு தலைப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த கூற்று தவறானது. வைரலாகும் பதிவில், “காங்கிரஸ் ” என்ற வார்த்தை காங்கிரஸ் உட்பட (திமுகவைத் தவிர்த்து) முழு இந்தியா கூட்டணியையும் குறிக்கிறது. பதிவின் முடிவில் திமுகவின் கணிக்கப்பட்ட இடங்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
உண்மை சரிபார்ப்பு:
தமிழ்நாடு கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து நேற்று முன்தினம் (ஜூன் 1) Aaj Tak வெளியிட்ட வீடியோ சரிபார்க்கப்பட்டது. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழகத்தில் 2 முதல் 4 இடங்களையும், இந்தியா கூட்டணி (திமுக உட்பட) 33 முதல் 37 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து விவாதித்த தொகுப்பாளர் அஞ்சனா ஓம் காஷ்யப், இந்தியா கூட்டணி (காங்கிரஸ், திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள்) 33-37 இடங்களை வெல்லும், காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியின் வாக்குகள் 46% என்று அவர் குறிப்பிட்டார். கிராபிக்ஸ் திரையில் காட்டப்பட்ட போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை BJP என்று குறிப்பிட்டு, அக்கட்சி தலைமையிலான கூட்டணி குறித்த கணிப்பு இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்தியா தொகுதி சீட் பகிர்வு:
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், ஆளும் திமுக 22 இடங்களில் போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், அகில இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பில் திமுக போட்டியிட்ட 22 இடங்களில் 20 முதல் 22 இடங்களிலும், மற்ற கூட்டணிகள் போட்டியிடும் 17 இடங்களில் 12 முதல் 15 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
எனவே வைரலான பதிவில் தொகுதிகளின் கணிப்பு வெளிப்படையாக காங்கிரஸுக்கு மட்டுமல்ல, இந்தியா கூட்டணி வென்ற மொத்த இடங்களில் திமுக வெற்றி பெறுவதாக கணித்த இடங்களைக் கழித்து கூறப்படுகிறது என கண்டறியப்பட்டது.
ஜூன் 1-ம் தேதி Aaj Tak வெளியிட்ட வீடியோவில் இருந்து ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. அந்த வீடியோவில், தொகுப்பாளர்கள் அஞ்சனா ஓம் காஷ்யப் மற்றும் சுதிர் சவுத்ரி ஆகியோர் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். கிராஃபிக் தமிழ்நாடு முடிவுகளைக் காட்டியிருந்தாலும், தொகுப்பாளர்கள் உண்மையில் கேரள முடிவுகளைப் பற்றி விவாதித்தனர்.
முடிவு:
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட போதிலும், 13-15 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது என்று ஒரு வைரலான ஸ்கிரீன் ஷாட் பொய்யான தகவல்களுடன் பரப்பப்படுகிறது. வைரலான படத்தில் உள்ள உண்மையான இடங்களின் எண்ணிக்கை, திமுகவைத் தவிர்த்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. எனவே இந்தக் கூற்று தவறாக வழிநடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by 'Logically Facts' and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.