“கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” - சந்திரபாபு நாயுடு பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக ஒருமனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா வழிமொழிந்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, “அற்புதமான பெரும்பான்மையை பெற்றுள்ளதால், கூட்டணியைச் சேர்ந்த அனைவரையும் வாழ்த்துகிறோம். தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் மோடி 3 மாதங்களாக ஓய்வே எடுக்கவில்லை. இரவும் பகலும் ஓய்வெடுக்கவில்லை. ஆந்திராவில் 3 பொதுக் கூட்டங்கள் மற்றும் 1 பெரிய பேரணியை நடத்தி, ஆந்திராவில் வெற்றி பெற்றதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர் ஆந்திரா பொதுக்கூட்டத்தில் உரையாற்றியது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் ஆந்திராவுக்கு வந்து பேரணிகளில் உரையாற்றினர். இது நம்பிக்கையை அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.