Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” - எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

07:59 PM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

அரியலூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

“தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தெரியும். எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். அதை கட்டி காத்தவர் ஜெயலலிதா. இரண்டு பேரும் தெய்வமாக இருந்து அதிமுகவை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

அதிமுகவை சீண்டி பார்க்காதீர்கள். இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது.

திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார். சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதலமைச்சர் செய்கிறார். திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். கஞ்சா கிடைக்காத இடமே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

மகளிர் உரிமைத்தொகையை கொடுக்க நாங்கள் பலமுறை போராடினோம். சட்டமன்றத்தில் அடிக்கடி வலியுறுத்தியதால் தான் 27 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகையை கொடுத்தனர். அதிமுக வலியுறுத்தியதால் தான் இப்போது பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைத்தது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் கொடுப்போம் என்று கூறினார்கள். இப்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் தான் உரிமை தொகை என்று கூறுகின்றனர். இப்படி மக்களை ஏமாற்றிவிட்டு மக்கள் எங்கள் பக்கம் என்று சொல்கிறார்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டு காலம் நிறைவு செய்த கட்சி. மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு நடந்தது. இந்தியா மட்டுமில்லை இந்த மாநாடை உலகே திரும்பி பார்த்தது. இது எல்லாம் தெரியாமல் சிலர் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை. மக்களை நம்பியே சந்திக்கிறோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்று கூறுகின்றனர். அதற்காக பாஜகவினரை சுட்டா வீழ்த்த முடியும்?

மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKAnnamalaiBJPChidambaramDMKEdappadi palanisamyElection2024Elections With News7TamilElections2024EPSNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article