“டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும்” - வாக்காளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை!
பாஜகவுக்கு வாக்களித்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும் என டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் பேசியுள்ளார்.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என்று டெல்லி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விகாஸ்புரி பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியில் அவர் பேசியதாவது;
“நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மீண்டும் மின்வெட்டை சந்திக்க நேரிடும். உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் 8 முதல் 10 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. டெல்லியில் மின்சாரம் இலவசம். ஆனால் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகாரில் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?. பாஜக ஆட்சிக்கு வந்தால் அண்டை மாநிலங்களைப் போல் மின்வெட்டு ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குடிநீர் கட்டணம் அதிகரித்து வருகிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு வாக்களித்து என்னை முதலமைச்சராக்குங்கள், உங்கள் அனைத்து குடிநீர் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வேன்” எனப் பேசியுள்ளார்.
சமீபத்தில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் டெல்லி முழுவதும், தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.