“அம்பேத்கர் வழிப்படியே நான் அரசியல் செய்கிறேன்” - அண்ணாமலை!
“அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியலிட்டுள்ளார்.
அம்பேத்கர் வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் வாங்கி, பாஜக மக்கள் வரும் இடமாக மாற்றியுள்ளது. உதயநிதி ஹிந்தி தெரியாது போடா என்று சொன்னவர். அமித்ஷா பேசியது என்ன புரிந்தது. உதயநிதி செய்தியாளர்களை நடத்தும் விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கொங்கு பகுதியில் எனக்கு அதிக சொந்தங்கள் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் எடுக்க கூடிய நடவடிக்கைகளில் நான் தலையிடுவதில்லை.
அல் உமா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுக அனுமதி அளித்துள்ளது. பொறுப்பில் இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சீமான் பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய கட்சியா என்றால் இல்லை. எங்கே அரசியல் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பால் கோவையின் வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டது. இஸ்லாமியர்கள் அனைவரும் நல்லவர்கள். அதில் உள்ள ஒரு சிலர் செய்யும் தீவிரவாதத்தை தான் பாஜக எதிர்க்கிறது. வரும் வெள்ளியன்று பாஷா ஊர்வலத்திற்கு எதிராக நடைபெறும் பாஜகவின் கருப்புக்கொடி பேரணிக்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்கள் யோசிக்க வேண்டும். பயங்கரவாதத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்று. அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. 35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? ஏன் காங்கிரஸ் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் நேரு, அம்பேத்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அம்பேத்கருக்கு போடுகிற ஓட்டு குப்பையில் போடுகிற ஓட்டு என்றார். தவெக கட்சி தலைவர் விஜய்யின் தனிப்பட்ட புகைப்படம் எப்படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விஜய் தமிழக அரசியலை உற்று கவனிக்க வேண்டும். பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை” என தெரிவித்தார்.