”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேருவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” - நிர்மல் குமார் பேட்டி
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமாரின் தவெக வை காப்பாற்ற அதிமுக வால் மாட்டும் தான் முடியும் என்ற கருத்து குறித்த கேள்விக்கு, “அவர்களுடைய நோக்கத்தை மறந்துவிட்டு பேசுகிறார்கள், பிரதான எதிரி திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு எங்களை பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார்கள். யார்வேண்டுமானலும் கூட்டணிக்கு அழைக்கலாம் ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் தவெக , NDA உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு, ”எங்கள் கொள்கை எதிரி பாஜக என ஏற்கனவே சொல்லிவிட்டோம், பாஜக அல்லது அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிற எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.