"வாரணாசி படம் வெளியானதும் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும்" - நடிகர் மகேஷ்பாபு பேச்சு!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் தலைப்பை பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்இடி ஸ்கீரினில் டிரைலர் வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. அதில் காளையில், கையில் சூலாயுத்துடன் ஹீரோ மகேஷ்பாபு வரும் காட்சி ஒளிபரப்ப பட்டது. அவர் கேரக்டர் பெயர் ருத்ரா என்றும் அறிவிக்கப்பட்டது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் தலைப்பு "வாரணாசி".
இதனை தொடர்ந்து விழாவில் ராஜமவுலி பேசுகையில், "இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தை (Premium Large Scale Format, Filmed for IMAX) அறிமுகப்படுத்துகிறேன். வழக்கமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதை சொல்வேன், ஆனால் இந்தப் படத்திற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாது, எனவே, தான் எதிர்பார்ப்புகளை சரியாக அமைக்க ஒரு வீடியோவை வெளியிட்டேன். இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பகுதி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியை உள்ளடக்கியது. அந்த காட்சியில் மகேஷ் பாபு 'இராமர்' வேடத்தில் நடித்தபோது எனக்கு மெய்சிலிர்த்தது.
மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா, இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பல புது தொழில் நுட்பத்தை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்த வீடியோவை வெளியிட ஏகப்பட்ட உழைப்பு. 45 ஜெனரேட்டர், 3 பிரமாண்ட கிரேன், நிறைய பேர் உழைப்பில் 100 அடி பிரமாண்ட் ஸ்கிரீனில் காண்பிக்க திட்டமிட்டோம். ஆனால் அதை டெஸ்ட் செய்த போது சிலர் ட்ரோனில் படம் பிடித்தனர். அது வருத்தமாக இருக்கிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தந்தைக்கு உண்டு..என் அப்பா, என் மனைவி ஆஞ்சனேயர் பக்தர்கள். அவர் இந்த பிரச்னையை சரி செய்து இருக்கலாம் என்றார். ஐமேக்ஸ் கேமராவில் இந்த படம் எடுக்கப்பட்டது. ராமாயணம், மகாபாரதம் சின்ன வயதில் இருந்தே தாக்கத்தை உருவாக்கி உள்ளது. ராமயணத்தின் அங்கமான ஒரு கதையை இந்த படத்தில் எடுக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து மகேஷ்பாபு பேசுகையில், "என் தந்தையான நடிகர் கிருஷ்ணா, ஒரு புராணப் படத்தில் நடி என்றார். அதற்கு உடன்படவில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மூலம் அவரது ஆசையை நிறைவேற்றுகிறேன். இன்று என் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். இதெல்லாம் வாழ்க்கையின் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு மற்றும் இது என கனவுப் படம். இந்தப் படத்திற்காகக் கடினமாக உழைத்து, எல்லோரையும் பெருமைப்படுத்துவேன். குறிப்பாக, எனது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிகம் பெருமைப்படுத்துவேன். "வாரணாசி' வெளியாகும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்துப் பெருமைப்படும். இந்த விழா படத்தின் தலைப்பு மற்றும் முதல் அறிமுகம் மட்டுமே, எதிர்காலத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிவித்தார்.
பிரியங்கா சோப்ரா பேசுகையில், "ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு என் உடம்புக்குள் மின்சாரம் போல் பாய்கிறது. இந்தப் படத்தின் மூலம் திரும்பவும் இந்திய திரை உலகிற்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பிருத்வி ராஜ் தைரியமானவர். மகேஷ் பாபு ஒரு லெஜன்ட். என்னை அவர் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.