“ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழ்நாடு அரசு, பல்கழைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது இன்று(ஏப்ரல்.08) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீப்பை வரலாற்று சிறப்புமிக்கது என்றார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் அதிகாரத்தை இது நிலைநிறுத்துகிறது, மேலும் மக்களின் விருப்பத்தைத் தடுக்க ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. ஜனநாயக உரிமைகளையும் சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான கேரளாவின் நிலைப்பாட்டையும், நடந்து வரும் சட்டப் போராட்டத்தையும் உறுதியாக நிரூபிக்கும் ஒரு நிகழ்வு”
இவ்வாறு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.