"வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை" - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
சமீபத்தில் நடந்த சில தேர்வுகளின் தாள் கசிவு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.
பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இதுபோன்ற சூழ்நிலையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.
அதற்காக, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றமும் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.