“திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது எடப்பாடி கே.பழனிச்சாமி மேடையில் பேசியதாவது:
உங்களுடைய பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து மத்தியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை வாங்கித்தரக்கூடிய ஒரு அற்புதமான நபர்தான் நமது வெற்றி வேட்பாளர் தமிழ்மணி.
நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. பெண்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சியில் தொழில் செய்வதே சிரமமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் டீசல் விலை உயராமல் பார்துக் கொண்டோம். எல்லா மக்களும் எல்லா பொருளும் வாங்க வேண்டி உள்ளது. டீசல் விலை உயர்வால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. மத்திய மாநில அரசுகள் டீசல் விலையை குறைப்பதாக இல்லை. இந்த கட்டுமான பொருள்களில் விலை என்ன என்பதை எண்ணி பாருங்கள். இனி கனவில் தான் வீடு கட்ட முடியும்.
கைத்தரி, மரவள்ளி கிழங்கு போன்ற தொழிகள் அதிமுக ஆட்சி காலத்தில் பாதுகாக்கபட்டது. குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி நெசவாளர்கள் தரிகளை எடைக்கு போடும் சூழல் உள்ளது. நூல் விலை உயர்வு குறித்து கண்டு கொள்ளாத அரசு தான் திமுக அரசு. எதையும் காதில் கேட்காதது போல செவிடன் காதில் சங்கு ஒதியது போன்று உள்ளது திமுக அரசு.
மீண்டும் அண்ணா திமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். அரிசி விலை ஆறு மாதத்தில் கடுமையாக உயர்ந்து விட்டது. சர்க்கரை, எண்ணை, பருப்பு என அனைத்து பொருளும் விலை அதிகரித்துவிட்டது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத முதல்வர் தான் மு.க.ஸ்டாலின். திருச்செங்கோடு பகுதியின் பிரதான தொழிலான விசைத்தறி தொழில் அழிந்ததற்கான காரணம் திமுக ஆட்சி. ஆனால் அதிமுக ஆட்சி மலரும் போது விசைத்தறி தொழில் மீண்டும் மலரும்.
ஜவுளி பூங்காவை இப்பகுதியில் கொண்டு வர அதிமுக முயற்சி செய்தது. ஆனால் திமுக ஆட்சி இதுவரை கண்டுகொள்ள வில்லை. அன்றாட மக்களின் வருவாய் குறைவு. ஆனால் செலவு அதிகரிப்பு. இதற்கு காரணம் தற்போதைய திமுக ஆட்சி. எந்த மாநிலத்தில் பொருளின் விலை குறைவாக உள்ளது என பார்த்து, அம்மாநிலத்தை தொடர்பு கொண்டு,பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்தது அதிமுக ஆட்சி காலக் கட்டத்தில் தான்.
கொரோனா காலத்தில் ஏழு லட்சம் மக்களுக்கு 11 மாதம் சத்தான உணவு கொடுத்தது அதிமுக அரசு. மக்கள் பாதிக்கபடும் போது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டியது அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் தான். ஆனால் தற்போதுள்ள திமுக ஆட்சியால் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். திமுக ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வரும் தொழிற்ச்சாலைகள் பல அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன.
அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன, தாலிக்கு தங்கம் கொண்டு வந்தது அதிமுக அரசு, தற்போது தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த திமுக ஆட்சி தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை முடக்கியுள்ளது. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அதிமுக அரசு இருந்த போது வழங்கியது, ஆனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அரசு ரத்து செய்தது.
ஏழை மாணவர்கள் படிப்பிற்கு ஏதுவாக மடிக்கணினி வழங்கப்பட்டது அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில். ஆனால் அதனையும் ரத்து செய்து சாதனை படைத்தது ஸ்டாலின் அவர்களின் ஆட்சி. திமுக காங்கிரஸ் கொண்டு வந்தது நீட் தேர்வு. நீட் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் குழு அமைத்து நாங்கள் செய்த திட்டம் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு. அதனால் தான் இன்று இதுவரை 2160 ஏழை மாணவர்கள் MBBS BDS படித்து வருகின்றனர்.
10 ஆண்டு காலத்தில் மக்களுக்கு வெளிச்சம் கொடுத்த ஆட்சி தான் அதிமுக. தமிழகத்தில் போதை பொருட்கள் இல்லாத இடமே இல்லை. தமிழகம் சீரழியும் ஆட்சியாக இருப்பதோடு சீரழியும் காட்சியாக இருக்கிறது. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் துணையோடு திமுக நிர்வாகிகள் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு பகுதியில் கள்ள மதுபானம் விற்பனை செய்தது ஊடகங்களில் வெளி வந்தது. இந்த செயல் 2 ஆண்டுகளாக நடந்துள்ளது . கள்ள சாராயம் குடித்து இறந்தால் மட்டுமே திமுக ஆட்சி நிவாரணம் வழங்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.