"திமுக திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுகவின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்ப்போம் எனும் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு விருதுகள் பெற்றது. ஆனால், திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் திமுக மேயர், மண்டலத் தலைவர்கள் வரியில் ஊழல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வரி ஊழல் குறித்து விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரி ஊழலில் மேயர் கணவரை கைது செய்த காவல்துறை மேயரை கைது செய்யவில்லை. வரி ஊழலில் எதோ மர்மம் இருக்கு, அதனால் தான் மேயர் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறை செயலிழந்து உள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி நடைபெறும்.
திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்துள்ளது. திமுக அரசு நிர்வாக திறமையற்று உள்ளதால் தமிழ்நாட்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு விருதுகள் வாங்கப்பட்டது, ஆனால், திமுக அரசு ஒரு விருது கூட வாங்கவில்லை. வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு காங்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
அதிமுக ஆட்சியில் புனித ஹஜ் பயண நிதி 6 கோடியில் இருந்து 12 கோடியாக உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல காக்கப்பட்டனர். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்ட சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது. அதிமுக ஆட்சியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.