தேர்தல் அறிக்கைகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI News‘
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.8,500 மற்றும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகவும், இந்த தேர்தல் அறிக்கைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டதாகவும் வைரலாகிவரும் பதிவு போலியானது என கண்டறியப்பட்டது.
மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் பெண் தலைவர்களுக்கு அவர்களின் கணக்கில் நேரடியாக ரூ.8,500 வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்தார். அத்துடன், நாட்டிலுள்ள ஒவ்வொரு டிப்ளமோ பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளும் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பயிற்சி பெறுவதற்கான உரிமையைப் பெறுவார்கள் எனவும், அதற்காக அவர்களுக்கு ரூ. 1 லட்சம் (மாதம் ரூ. 8,500) உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 8,500 மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் என்ற தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டதாகக் கூறி ஒரு பதிவை ஜூன் 11 அன்று ட்விட்டர் (எக்ஸ்) பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவின் தலைப்பில், “ராகுல் காந்தி ரூ.8,500 மாதம் மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் போன்ற தனது தேர்தல் வாக்குறுதிகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பொய்களை பயன்படுத்தி 2024 பொதுத் தேர்தலில் அவர் 99 இடங்களைப் பெற முடிந்தது. இது தேர்தல் மோசடி மற்றும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் வாக்குறுதிகள்” இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவின் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தேடலில், சமூக ஊடக தளங்களை ஸ்கேன் செய்தபோது, பல பயனர்கள் அந்த பதிவை பகிர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. பகிரப்பட்ட மூன்று பதிவுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. பதிவு 1, பதிவு 2 மற்றும் பதிவு 3.
தொடர்ந்து, கூகுளில் முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது. ஆனால் வைரலாகும் இந்த பதிவை ஆதரிக்கும் வகையில், எந்த கமெண்டுகளோ அல்லது பதிவுகளோ கிடைக்கவில்லை. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் (ட்விட்டர் மற்றும் பேஸ்புக்) வைரலாகும் பதிவு குறித்த ஏதேனும் பதிவு உள்ளதா என தேடப்பட்டது. ஆனால் அவ்வாறாக எந்த பதிவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், சமூக ஊடக பகுப்பாய்வு இணையதளமான சோஷியல் பிளேடில் சுயவிவரச் செயல்பாடு ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, சமீபத்திய இடுகை எதுவும் நீக்கப்படவில்லை என்பது தெளிவானது. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
அதேபோல், சோஷியல் பிளேடில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தின் செயல்பாட்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, சமீபத்தில் எந்த இடுகையும் நீக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், ராகுல்காந்தி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் தருவதாக உறுதியளித்ததாக சமூக வலைதளங்களில் கூறப்பட்ட செய்திகள் தவறானவை என்றும் கண்டறியப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், “25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு டிப்ளமோ பட்டதாரி அல்லது கல்லூரி பட்டதாரிகளுக்கும் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கும் புதிய உரிமைச் சட்டத்திற்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சியானது திறன்களை அளிக்கும், வேலைவாய்ப்பை மேம்படுத்தும் மற்றும் இளைஞர்களுக்கு முழுநேர வேலை வாய்ப்புகளை வழங்கும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சியின் தேர்தல் அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளுக்காக காங்கிரஸோ அல்லது ராகுல் காந்தியோ மன்னிப்பு கேட்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
வாக்குறுதிகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை. சமூக வலைதளங்களில் தவறான செய்திகளுடன் ஒரு போலி பதிவு பகிரப்பட்டது.
முடிவு:
"மாதம் 8,500 ரூபாய் மற்றும் இளைஞர்களுக்கு மாதம் 1,00,000 சம்பளம்" என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டதாக சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by PTI News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.