எம்.பி. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் - செல்வப்பெருந்தகை கண்டனம்!
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலந்து கொண்டு பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பாஜக அரசை விமர்சித்து பேசினார். இந்த நிலையில் நேற்று இரவு சு.வெங்கடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் நேற்று இரவு தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் புகார் அனுப்பியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்தை கண்டித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் செல்வப்பெருந்தகை இச்சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு. வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து போராடி வருகிற ஒருவரை மிரட்டுவது, ஜனநாயகத்தையே தாக்கும் செயல் ஆகும். இத்தகைய மிரட்டல்கள் சட்ட ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியில் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கும் விரோதமாகும். தகவல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பாதுகாப்பாக தங்கள் பணிகளைச் செய்ய ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.