“ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு...” - திமுக மீது அமித்ஷா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தமிழ்நாடு வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிதாக பாஜக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டாக நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷா பேசியதாவது, “அதிமுக - பாஜக கூட்டணி அடுத்து வரும் தேர்தலை இணைந்து சந்திக்கவுள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெரும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இணைந்துதான் ஆட்சி அமைக்க போகிறோம். எடப்பாடி பழனிசாமி அதற்கு தலைமையேற்கிறார். அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை, இது இயல்பாக அமைந்த கூட்டணி. அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிடப்போவதில்லை. தேர்தல் தொடர்பாக அவர் தலைமையில் திட்டமிடவுள்ளோம். இந்த கூட்டணி இரு கட்சிகளுக்கும் பலனளிக்க கூடியது. யார் யாருக்கு எத்தனை தொகுதி என்பதைப் பற்றி பிறகுதான் முடிவெடுக்கப்படும்.
சனாதனம், மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் திமுக தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்பி வருகிறது. இதெல்லாம் அவர்கள் ஆட்சியில் உள்ள முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே. வரப்போகும் தேர்தல் திமுகவின் மிகப்பெரிய ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தலித் மக்கள் மீது ஏற்படும் தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு போன்றவைதான் பேசுபொருளாக இருக்கும். அதே போல் டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை, மின்சாரதுறை முறைகேடு, போக்குவரத்து துறை முறைகேடு, பண மோசடி போன்றவற்றிற்கு முதலமைச்சரும் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர்.
தேர்தலில் திமுக போல் மடைமாற்றும் வேலையை செய்யாமல், மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்துவோம். கூட்டணியில் எந்தவித குழப்பம் இல்லை. உறுதியாக தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம். தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் கெளரவமாக கருதுகிறோம். தமிழ்நாட்டை பிரச்னைக்குரிய மாநிலமாக கருதவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டை மதித்து தமிழ் பண்பாட்டை மதித்து நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார். ஆனால் திமுக அதை எதிர்த்தது.
தமிழின் பெருமையை போற்றும் வகையில் காசி தமிழ் சங்கமமத்தை பிரதமர் மோடி பெருமையாக கருதினார். மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தமிழில் மருத்துவம், உயர் கல்வி, பொறியியல் பாடப் புத்தகங்களை உருவாக்குங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். ஆனால், இதுவரை அது நடைபெறவில்லை. திமுக தமிழ், தமிழ் என்று சொல்கிறார்களே இதுவரை தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளார்கள்? என்பதை தமிழ்நாடு மக்களிடம் பட்டியலிட முடியுமா?”
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.