For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செங்கோல் குறித்த கருத்து...அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

03:57 PM Jul 03, 2024 IST | Web Editor
செங்கோல் குறித்த கருத்து   அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு வெங்கடேசன் எம் பி பதில்
Advertisement

செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு என்று தான் கூறியதை மறைத்து விமர்சிப்பதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் உரை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் முன்வைத்தார்.  இதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ.பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள் என்று பேசினேன்.

ஆனால் நீங்களோ “செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு” என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப் புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள்.

செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களை அறவழிப்படுத்துவதும் நீதியின் பால் ஆட்சி செய்ய வைப்பதும் தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும்பிரச்சனை. அதனால் தான் அறத்தின் குறியீடாக செங்கோலைத் தமிழ் இலக்கியங்கள் பேசின. “வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்” மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியபோது அவர்களை கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக ”செங்கோல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயக காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.

நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றி விட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்து வந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் 40 அடி உயரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் 6 வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துத்துவா மதவெறித்தத்துவம் உங்களை வழிநடத்துகிறது. அதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.

இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக்கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.

எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப்பிடித்துப் பதவி யேற்றுக்கொண்டோம். “நீங்கள் அழிக்க நினைப்பதை காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.

மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.
நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும்விடப் பெரியவர் அவைத்தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச்சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

எல்லாவற்றையும்விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக்கொளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள். அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

ஆனால் இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப்பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார்.

ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.

நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன். “அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது”.

வரலாற்றுச்சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்.

இவ்வாறு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement