'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்' - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !
கோவைக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு (பிப்.25 ) வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம், திருவண்ணாமலையில் உள்ள பாஜக அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும். தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல். பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது.
தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார்.