Rain Alert | இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்படுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (25-11-2025) காலை 5.30 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-11-2025), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (26-11-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.