For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
05:19 PM Nov 26, 2025 IST | Web Editor
கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா     அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Advertisement

கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து தூய்மைப் பணியாளர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மை தான்.

தூய்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படும் காரணம் உண்மையல்ல... மாறாக, அதன் மூலம் ஆட்சியாளர்கள் ஆதாயம் பார்க்கத் துடிப்பது தான் காரணம் ஆகும். ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார் பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் திமுக அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.

ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் திமுக ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும். தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement