”ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே...” - கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்!
மதுரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(மே.16) நடைபெற்றது . இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர்
செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து டாஸ்மார்க் அலுவலர்கள் வீடுகளில் ED ரெய்டு செய்வது
குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, “ED என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதில் தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனைத் தொடர்ந்து ரைடு குறித்த ஆலோசனைகள் நடைபெறும். அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு செய்து குறித்து, முழுமையாக தெரியாது. தெரிந்த பின் பதில் கூறுகிறேன் நீங்கள் சொல்லித்தான் எனக்கே ரெய்டு
நடைபெறுகிறது என தெரிகிறது” என்று கூறினார்.
தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணி இல்லை என்ற கருத்து குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தபோது, “அது அவருடைய சொந்த விருப்பம்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே எனது விருப்பம். நாட்டு மக்கள் நலன் கருதி அந்தந்த கட்சி தலைவர் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவில் கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். பொறுமையாக இருங்கள் தேர்தல் கூட்டணி குறித்து உங்களுக்கு சொல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அமித்ஷா சென்னை வருகையின்போது ஓபிஎஸ்-ஐ சந்திக்காதது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அமித்ஷா வந்தது வேறு விஷயம். அதனால் அன்றைக்கு அவரை சந்திக்க முடியவில்லை. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கூட்டணியில் உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது. பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு ஆட்சியில் பங்கு இருக்குமா? என்பதை பற்றி பார்ப்போம். மதுரை நக்கீரருக்கு நீதி கிடைத்த மண் இது. கண்டிப்பாக நீதி கிடைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.