“வேலையின்மை என்ற நோயால் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிக்கின்றன” - ராகுல் காந்தி காட்டம்!
நாட்டிலேயே, பாஜக ஆளும் மாநிலங்கள் வேலையின்மை என்ற நோயின் மையமாக மாறியுள்ளதாக மக்களவை எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றன. இதனால், இளைஞர்கள் பலர் நிரந்தர வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 100 பேர் போட்டிபோடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை சிக்கல் உச்சம் தொட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்ச்சாட்டி வருகின்றன. ஆளும் அரசு அதற்கு மறுப்பும் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு ஏராளமானோர் குவிந்ததால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் உள்ள தெர்மாக்ஸ் நிறுவனத்தில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையறிந்த இளைஞர்கள் பலர், அந்த நிறுவன வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோவில் காணலாம்.