"தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்" - இபிஎஸ் புகழாரம்
இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் மகாகவி பாரதியார். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், பாரதியாரின் 144ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"பெண் விடுதலை, சமத்துவம், தேசிய உணர்வு, மொழிப்பற்று ஆகிய உயர்ந்த கொள்கைகளை தனது எழுத்துக்களால் மக்கள் மனங்களில் விதைத்து, புதிய சிந்தனைகளுக்கு ஒளியூட்டிய விடுதலைச் சிந்தனையாளர். தாய்மொழியான தமிழின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்த முண்டாசுக் கவிஞர், மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில், தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்த அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.