"பாரதியார் இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர்" - பிரதமர் மோடி புகழாரம்!
இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் மகாகவி பாரதியார். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், பாரதியாரின் 144ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதியாரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.