"தைரியமா இருங்க மா" - அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை மரணம் என்பதால் இந்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கிடையே, உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.
அஜித்குமாரின் தாயிடம் இபிஎஸ் பேசியதாவது,
"சில மனித மிருகங்கள் சரமாரியாக தாக்கியதில் உங்களது மகன் அஜித்குமார் உயிரிழந்துவிட்டார். தைரியமாக இருங்க மா.. உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுடன் துணை நிற்கும். இது மீள முடியாத துயரம். தாய் தன்னுடைய மகனை இழப்பது கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. பெற்ற தாய்க்கு தான் அதன் வலி தெரியும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும் மனம் தளராமால் இருங்கள். நீங்கள் நிம்மதியாக இருந்தால்தான் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
நாங்கள் உங்களுக்கு முழு துணையாக இருப்போம். அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றத்தின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராதீங்க மா.. என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் மா" என்று தெரிவித்தார். பின்னர் அஜித்குமாரின் தம்பி நவீன் குமாரிடம் பேசிய இபிஎஸ், "உங்களுடைய அண்ணன் இறப்பிற்கு காரணமானவர்கள் தண்டிப்படும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். தைரியமா இருங்க பா" என்றார்.