ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் என மேலும் 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வரும் ரவுடி சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்த வைரமணி, ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பின்பு சொந்த ஊரான வீரநல்லூர் சென்று பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேயில் வைத்து வைரமணியை போலீசார் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட வைரமணி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? எதற்காக சொந்த ஊர் சென்று பதுங்கி இருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.