டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளாத குற்றச்சாட்டு வைத்தனர்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாஜக அரசு, அம்பேத்கரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இது சரியல்ல. இது அம்பேத்கரின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு எனது வேண்டுகோள், நீங்கள் பிரதமர் புகைப்படத்தை வைக்கலாம், ஆனால் தயவுசெய்து அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றாதீர்கள்” என்று கூறியிருந்தார்.
அதே போல் அதிஷி தனது எக்ஸ் பதிவில், “பாஜக தனது உண்மையான பட்டியலின மக்கள் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தைக் காட்டியுள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “ அரசாங்கத் தலைவர்களின் புகைப்படம் வைக்கப்பட வேண்டாமா? குடியரசுத் தலைவர் புகைப்படம் வைக்கப்பட வேண்டாமா? தேசப்பிதா காந்தியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டாமா? பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் நாட்டின் மரியாதைக்குரிய ஆளுமைகள் மற்றும் எங்கள் வழிகாட்டிகள்.
இந்த அறை டெல்லி முதலமைச்சரின் அறை. அதனால் அரசாங்கத்தின் தலைவராக, நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு பதிலளிப்பது எனது வேலை அல்ல. நான் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்" என்று பதில் தெரிவித்தார். ரேகா குப்தா முதலமைச்சரான பிறகு வெளியான முதலமைச்சர் அலுலகம் தொடர்பான வீடியோ ஒன்றில், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் அருகிலுள்ள சுவர்களில் வைக்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.