For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக வியூகம் - பாஜக எதிர்ப்பில் தீவிரம்?

06:28 PM Jan 13, 2024 IST | Web Editor
அதிமுக வியூகம்   பாஜக எதிர்ப்பில் தீவிரம்
Advertisement
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள அதிமுக, மெகா கூட்டணி அமைப்போம் என்கிறது. அதிமுகவின் வியூகம் என்ன? யாருக்கு சிறுபான்மையினர் வாக்குகள்...? விரிவாக பார்க்கலாம் சொல் தெரிந்து சொல் பகுதியில்...

கடந்த 1998, 2004 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.முக போட்டியிட்டது. ஆனால், இந்த கூட்டணி தொடரவில்லை. கடந்த 2004 தேர்தல் தோல்விக்கு பிறகு "பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை" என்று அறிவித்தார் அக்கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா. தொடர்ந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் இந்த லேடியா.." என்று தனித்து களமிறங்கி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை வென்றார். இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது அதிமுக.

Advertisement

அதிமுகவின் நீண்ட காலப் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் ஒருபகுதியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்தது. இந்த கூட்டணியில் போட்டியிட்டவர்களில் தேனியில், ஓ.பி.ரவீந்திர நாத் மட்டுமே வெற்றி பெற்றார். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனாலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தன. எதிர்க்கட்சியாக அதிமுக உறுப்பினர்களுடன் பாஜகவின் உறுப்பினர்கள் நால்வரும் சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர்.

அண்ணாமலையால் சர்ச்சை

வரும் 2026ல் முதலமைச்சர் வேட்பாளர், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சால், கூட்டணிக்குள் விரிசல் விழத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். சமுக வலைதளங்களில் இருதரப்பினரின் விமர்சனம், குற்றச்சாட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தின. இது, கடந்த செப்டம்பரில் கூட்டணி முறிவு என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை சென்றது. மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, 2026ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினரின் அரண்

கிறிஸ்துமஸ் விழா, புரட்சி பாரதம் கட்சி நடத்திய மனிதம் காப்போம் மாநாடு, எஸ்டிபிஐ நடத்திய வெல்லும் மதச்சார்பின்மை மாநாடு ஆகியவற்றில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மதச்சார்பற்ற அணி என்று திமுக கூட்டணி ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிறுபான்மையினரைக் காக்கும் அரண் அதிமுகதான். சிறுபான்மையினரின் ஆதரவோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகள் பாஜக கூட்டணியில் சேர கதவுகள் திறந்தே இருக்கிறது என்று பாஜக காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

புரிந்துணர்வுடன் விலகல் - திமுக கூட்டணி விமர்சனம்

அதிமுக கூட்டணி இல்லை என்றாலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை சந்தேகத்தோடு தான் பார்க்கிறார்கள். காரணம், "பொது சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ராமர் கோயில் என அனைத்திலும் பாஜகவின் நிலைப்பாடு அல்லது ஆதரவு என்று இருக்கும் அதிமுக, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கொள்கை எதிர்ப்பால் விலகவில்லை. புரிந்துணர்வோடு விலகியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணைவார்கள். விலகல் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். என்றைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் கிடைக்கும்" என்கிறார்கள் I.N.D.I.A கூட்டணித் தலைவர்கள்.

மவுனம் காத்த அதிமுகவினர்

மேலும், ’தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி சேரும் திட்டத்தில் அதிமுக உள்ளது. ஆகையால்தான் பாஜகவை விமர்சிக்காமல் அதிமுகவினர் மவுனமாக இருக்கிறார்கள்’ என்றும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக மற்றும் மத்திய அரசு குறித்து அதிமுக தலைவர்களும் கருத்து சொல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அந்த மவுனத்தை உடைத்து, விமர்சனத்தைத் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமியின் விமர்சனம்

அண்ணாமலையை மட்டுமின்றி மத்திய அரசு, பிரதமர் மோடி குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக "திராவிடக் கட்சிகளால்தான் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதல் மாநிலமாக இருக்கிறது. இதை மறைத்து, திராவிட கட்சிகளால்தான் ஊழல் இருப்பதாக, தான் தோன்றித்தனமாக அண்ணாமலை பேசுகிறார். மத்திய அரசும் பிரதமரும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறார்கள்" என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியின் இந்த பேச்சு, அதிமுக வியூகத்தின் வெளிப்பாடு. குறிப்பாக, "அதிமுக- பாஜக மறைமுக கூட்டணி என்கிற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக எதிர்ப்பை தீவிரப்படுத்த அல்லது அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சிக்கிறது" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு மெகா கூட்டணியை அமைத்து, பாஜக எதிர்ப்பை தீவிரப்படுத்துமா அதிமுக...? சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்...? தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்..? வெல்லுமா அதிமுக வியூகம்...? பொருத்திருந்து பார்க்கலாம்....

Tags :
Advertisement