பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டதாக அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்புப் புலனாய்வு குழுவினர் நேற்று (ஜன.7) இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்தினர். அப்போது கைதான இருவருக்கும் ஜனவரி 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல் காவல் ஆய்வாளர் ராஜி இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.