2024 மக்களவைத் தேர்தல் : ரூ.8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்! - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினரால் நடத்தப்பட சோதனையில் இதுவரை ரூ.8,889.74 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102 தொகுதிகள்) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88 தொகுதிகள்) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93 தொகுதிகள்), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96 தொகுதிகள்), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49 தொகுதிகள்), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58 தொகுதிகள்) நடைபெற்றது.
7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி (நாளை) 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 7ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அதிகளவு பணத்தை எடுத்துச் செல்வது வாகன சோதனைகளின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8,889. 74 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், மது, பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!
இது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது :
"தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம், தங்க நகைகள், மது, பரிசுப்பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.8,889.74 கோடியை எட்டியுள்ளது.
இதுவரை பணமாக ரூ.849 கோடியே 15 லட்சமும், ரூ.814 கோடி மதிப்புடைய 5.39 கோடி லிட்டர் மதுபானங்களும், ரூ.3,958 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.1,260 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.2006 கோடி மதிப்பிலான இதரப் பொருள்களும் பறிமுதல் ஆகியுள்ளன. ரொக்கத் தொகையுடன் சேர்த்து அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8,889 கோடியே 74 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் மே 18 வரை நடந்த அதிரடி சோதனைகளில் அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1,187.85 கோடி, பஞ்சாப்பில் ரூ.665 கோடி, டெல்லியில் ரூ.358 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது மொத்தம் ரூ.3,476 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு மடங்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது"
இவ்வாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.