15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை - அதிமுக, தேமுதிக நூதன முறையில் எதிர்ப்பு !
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் உள்ளது. இதனிடையே, முதல்கட்ட முத்தரப்பு பேச்சு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல், தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே,போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 15வது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மற்றும் நாளை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேடையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் 15வது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்கள், இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால், அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி கண்களில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கண்கட்டி வித்தை காட்டுவதாக, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.