வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு: அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிரம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. எனவே முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, வேட்புமனு தாக்கலுக்காக 6 நாள்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் (மார்ச் 25) மனுக்களை அளித்தனர். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது.
அதில், ஆண்கள் சார்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளான மார்ச் 20-ம் தேதி 22 மனுக்களும், 21-ம் தேதி 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 22-ம் தேதி 47 மனுக்களும், 25-ஆம் தேதி 402 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். அதன் விவரங்கள் பின்வருமாறு:
திமுக மற்றும் கூட்டணி
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
கரூரில் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்
கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
சிதம்பரத்தில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல்
தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
பாஜக மற்றும் கூட்டணி
கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.