"எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது" - ஜோதிமணி எம்.பி பதிலடி
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ இடம்பெற்றிருந்தது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "₹ குறியீட்டை நீக்குவது, இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில், எமது பெருமைவாய்ந்த தமிழ் எழுத்தைப் பயன்படுத்துவது மொழி, பிராந்தியப் பேரினவாதம் என்றால், எங்கள் மீது வேறொரு மொழியைத் திணிப்பது, எமது மாநிலத்தின் உரிமைகளை மறுப்பது, நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவத்தை குறைத்து இல்லாமலாக்குவது, எமது வரிப்பணத்தை, எமது மக்களுக்கு உரிமையுள்ள நிதியை, இயற்கைப் பேரிடர்களால், எமது மக்கள் பெரும் துயரில் துடிக்கும்போது கூட கொடுக்க மறுப்பதற்கு என்ன பெயர்? நீங்கள் செய்வது தான் அப்பட்டமான மொழி, பிராந்தியப் பேரினவாதம்.
அதற்குப் பணிய மறுப்பதும், நீங்கள் அழிக்கத்துடிக்கும் எமது அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து முன்னிறுத்துவதுமே எமது எதிர்வினை. அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம். எங்களைப் பொறுத்தவதை இது எமது இனத்தின் அடையாளம். எமது எட்டு கோடி மக்களின் சுயமரியாதை. எமது உரிமைப் போரிற்கான சங்கநாதம்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில், எமது பெருமைவாய்ந்த தமிழ் எழுத்தைப் பயன்படுத்துவது மொழி,பிராந்தியப் பேரினவாதம் என்றால், எங்கள் மீது வேறொரு மொழியைத் திணிப்பது,எமது மாநிலத்தின் உரிமைகளை மறுப்பது,நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவத்தை குறைத்து இல்லாமலாக்குவது,
எமது… pic.twitter.com/CfcmODt8fk— Jothimani (@jothims) March 14, 2025
நாங்கள் இந்த நாட்டை மதிக்கிறோம்.நேசிக்கிறோம். எமது மண், உங்களால் கைவிடப்பட்ட லட்சணக்கான வேறு மாநிலங்களைச் சேர்ந்த, வேற்று மொழி பேசுகிற மக்களுக்குச் சோறிடுகிறது. பிழைப்பிற்காக எமது மண்ணிற்கு வந்த மக்களின் மொழியை, கலாச்சாரத்தைப், பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய எமது நிலமும், மொழியும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்தாரை வாழவைக்கிறது. எமது மக்களின், ரத்தமும், வேர்வையும் தான் வரியாக பெருமைமிகு இந்திய தேசத்தின் கஜானாவை நிரப்புகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. எமது, இனமும் மொழியும் இந்திய தேசத்தின் இதயத்துடிப்பாக இருக்கும். மகத்தான இந்திய தேசத்தின் உயிர்நாடியான வேற்றுமையில், ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் உங்கள் பாஜகவின் பிரிவினைவாத, வெறுப்பு அரசியலில் இருந்து பாதுகாக்க இந்த தேசத்தை அணிதிரட்டும். இந்தப் போரில் நாங்கள் நிச்சயம் வெல்வொம்"
இவ்வாறு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.