“ஒருவர் செய்த தவறுக்காக மொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது” - அண்ணாமலை பேட்டி
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பாஜக மாநிலத் தலைவர்
அண்ணாமலை சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை அதிகாரி மீதான சோதனை மற்றும் கைது என்பது முதலும் இல்லை முடிவும் இல்லை. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றில் அதிகாரிகள் கைது செய்யப்படுவது புதிதல்ல. இதற்கு முன்னால் இதுபோல் பல பேர் கைதாகி உள்ளனர்.
காரணம் மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள். மனிதர்கள் தவறு செய்கின்றனர். ஒரு மனிதன் தவறு செய்வதால் ஒரு முழு அமலாக்கத்துறையையும் குற்றம் சொல்ல முடியாது. கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அமலாக்கத்துறை என்பதால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும்.
அமலாகத்துறை விவகாரத்தை அரசியலாக பார்க்க வேண்டாம். இதனை சிலர் அரசியலாக்குகின்றனர். இதையும் சில அரசியல்வாதிகளையும், தலைவர்களையும் சம்பந்தப்படுத்தி பேசுவது என்பது தமிழக அரசியலில் மெச்சுரிட்டி குறைவான அரசியல்வாதிகள் இருப்பதை காட்டுகின்றது. இது தமிழகத்தோட சாபக்கேடு. இதற்கு பாஜக விமோசனம் கொடுக்கும்.
சென்னை மழை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேட்டியை மடித்துக் கட்டி பார்வையிட்டார். பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் வேட்டியை மடித்து கட்டி பார்வையிடுகின்றார். அவரது மகன் உதயநிதி பேண்ட்-ஐ சுருட்டிக் கொண்டு பார்வையிடுகின்றார். அடுத்து அவருடைய மகனும் பார்வையிடுவார். அவர்களைப் பொருத்தவரையில் சென்னையை வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.
இதையும் படியுங்கள் : இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
தெலங்கானாவில் டபுள் டிஜிட்டில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும். ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக உறுதியாக வெல்லும். சத்தீஸ்கரில் பாஜக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மிசோரோமில் பிராந்திய கட்சிக்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி. 2024 மாபெரும் வெற்றிக்கு இந்த மாநில தேர்தல் முடிவுகள் அடித்தளமாக இருக்கப் போகின்றது” என்று தெரிவித்தார்.