“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக பாமக வேட்பாளர் நிற்க உள்ளார்” - அண்ணாமலை பேட்டி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக பாமக வேட்பாளர் நிற்க உள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வருகை தந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பாக மலர் தூவி மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கமலாலயத்தில் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் எல்.முருகன்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், விபி.துரைசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட வேட்பாளர் வினோத் பி.செல்வம், வடசென்னையில் போட்டியிட்ட வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா மேடையில் பேசிய அண்ணாமலை,
“தமிழகத்தின் குரலாக எல்.முருகன் குரல் இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது பாஜக தனது பணியை செய்து முடித்திருக்கும். பிரதமர் மோடியிடம் தவறான மனிதர்கள் நெருங்க முடியாது. நல்ல மனிதர்களை தான் அவர் அருகில் வைத்திருப்பார். எல்.முருகனுக்கு இரண்டாவது முறையாக பொறுப்பு கிடைத்திருக்கிறது. பிரதமர் அரசாங்கத்தின் இரண்டு துறைகளை எல்.முருகனுக்கு வழங்கி உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் வாக்கு சதவீதத்தை உயர்த்தியுள்ளோம். பொறுமையாக தான் சில விஷயங்களை செய்ய முடியும். இந்த நேரத்தில் தான் நம்முடைய உழைப்பு இரட்டிப்பாக இருக்க வேண்டும். தொண்டர்கள் தலைவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் தான் உள்ளது. ஒரு நல்ல, நேர்மையான அமைச்சர் எந்த ஒரு தவறும் சொல்ல முடியாத அளவுக்கு தனது பணியில் செயல்படக்கூடிய அமைச்சர் எல்.முருகன்.
கட்சியைப் பற்றி வேறு விதமாக பேசுவதை குப்பையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியை பற்றி நன்றாக பேசுவதை உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது நாம் அனைவரும் அவரை உற்சாகமாக வரவேற்க வேண்டும், அதற்கான நாள் குறைவாக தான் உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “சரித்திர சாட்சியாக பிரதமர் மூன்றாவது முறையாக பதிவேற்றுள்ளார். எல்.முருகன் தமிழக இணைப்பு பாலமாக உள்ளார். இரண்டு முக்கியமான பொறுப்புகள் இன்று அவர் கையில் இருக்கிறது. திமுகவினர் ஜூன் 14 வெற்றி விழா கொண்டாட திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். எனவே ஜூன் 15 வெற்றி விழா கொண்டாட உள்ளனர். கோயம்புத்தூர் வளர்ச்சியை நசுக்கியது திமுக தான்.
ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலைப் போல், விக்கிரவாண்டி தேர்தலில் இருக்கக் கூடாது. அங்கு பாமக வேட்பாளர் பாஜக சார்பாக நிற்க உள்ளனர். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க உள்ளோம். அனைத்து தலைவர்களும் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழிசை சௌந்தரராஜன் கட்சியின் மூத்த தலைவர், தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தலைவராக அவர் இருந்தார். இருப்பார். அமித்ஷாவின் பேச்சு அன்பானதாக இருக்கும். அவர் அவ்வாறுதான் பேசுவார். அதை கண்டிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” இவ்வாறு பேசினார்.