புகார் கொடுக்க சென்ற பெண்... பாலியல் தொல்லை கொடுத்த காவலர் - ஆவடியில் அதிர்ச்சி!
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் சென்றார். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து அவர், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் பைக் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடு போன பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆவடி குற்றபிரிவை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் சம்பந்தபட்ட புகார்தார் பெண்ணை தொடர்புகொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது, வாகனத்தை பெற்றுக்கொள்ள வரும்படி அழைத்துள்ளார்.
மேலும் இதற்காக 15000 ரூபாய் பணமும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண் போலீசாரிடம் ரூ. 15000 கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என பேரம் பேசி, 5000 ரூபாய் கொடுப்பதாக
தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காவலர் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனிமையில் இருக்க வற்புறுத்தி ஆவடியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துள்ளார். இதனை கேட்ட அப்பெண் அதிர்ச்சியில், இது குறித்து தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்ணின் அண்ணன் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் ஹாரி தாஸை விடுதியில் வைத்து கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் போலீஸூக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகாத முறையில் நடக்க முயன்ற காவலரை அங்கிருந்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அதன் பின்பு பாதிக்கபட்ட பெண் மற்றும் அவரது அண்ணன் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவலர் ஹரிதாசிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை மேற்கொண்டதில் குற்றம் நிரூபணம் ஆனதால் ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பிரீத்தா கார்டன் விடுதி உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆவடி காவல் ஆணையர் வட்டாரத்தில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது