வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் பாதி பேர் அரசுப்பணி செய்யப்போகிறார்களா? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி
வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா? என்று பாஜகவின் வாக்குறுதி குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த பிப்.04-ம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார்.அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு தகவல்
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது X தள பக்கத்தில், “ஒரு ஒப்பீட்டுக்கு - தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம். பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று.... அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-ல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.