For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதிமுக, விசிக, மநீம தனி சின்னம் ஏன்..? களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி...?

11:00 AM Feb 14, 2024 IST | Web Editor
மதிமுக  விசிக  மநீம தனி சின்னம் ஏன்    களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி
Advertisement

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம், கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, பிரச்சாரத்திற்கான பயணத்திட்டம் என தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான INDIA கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.

Advertisement

தனிச்சின்னத்தை விரும்பும் கட்சி:

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்களின் சின்னத்திலேயே போட்டியிட்டன. இப்போதும் போட்டியிட உள்ளன. அதே நேரத்தில், கடந்த தேர்தலில் மதிமுக போட்டியிட்ட ஒரு தொகுதியான ஈரோட்டில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் திமுக சின்னத்திலும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தற்போது மதிமுக, விசிக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் மக்கள் நீதி மய்யம் தங்களது சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாமரையில் நிற்கும் வேட்பாளார்கள்:

பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தற்போது பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தவிர வேறு கட்சிகள் உறுதியாகவில்லை. புரட்சி பாரதம் கட்சிக்கு கூட்டணியில் இடம் ஒதுக்கப்பட்டால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என தெரிகிறது. கூட்டணியை முடிவு செய்யாத பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் சின்னத்திலும், கடந்த முறை அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் மாநில காங்கிரஸ், இப்போது கூட்டணிக் கட்சியின் சின்னத்திலும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

தனி சின்னம் ஏன்...?

எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெறுகிறோமோ அந்த கட்சியின் உறுப்பினராகத்தான் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் கருதப்படும். ஆகையால் கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதால், தனித்தன்மையை இழப்பதாக கட்சிகளின் தொண்டர்கள் நினைப்பது ஒருபக்கம் இருக்க, மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றால் தனி சின்னத்தில் போட்டியிட்டு, குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, தனி சின்னத்தில் போட்டியிட்டு, பதிவு செய்யப்பட்ட கட்சியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்கிற நிலையை அடைய கட்சிகளும் விரும்புகின்றன.

கூட்டணியின் சின்னம் ஏன்?

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் சின்னம் மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளது. குறிப்பாக திமுகவின் உதயசூரியன், அதிமுகவின் இரட்டை இலை, காங்கிரஸ் கட்சியின் கை, பாஜகவின் தாமரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சுத்தியல் அரிவாள் ஆகியவற்றை குறிப்பிடலாம். ஆகையால், அந்த சின்னத்தில் போட்டியிடும் போது வெற்றி வாய்ப்பு கொஞ்சம் எளிதாகும் என்கிறார்கள்.

தனி சின்னத்தால் ரிஸ்க்?

கடந்த தேர்தலில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் ஒரு லட்சத்து 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்ற, இறக்கங்களுக்கு இடையே மூவாயிரத்து 200 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. இது போன்ற நிலையைத் தவிர்க்கவே, மக்களுக்கு நன்கு அறிமுகமான சின்னத்தில் போட்டியிட திமுகவும் தற்போது வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவும் கூட்டணிக் கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.

மக்கள் விருப்பம்:

எனினும் விரும்பும் கூட்டணி, கட்சி அல்லது வேட்பாளருக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். எடுத்துக்காட்டாக, கடந்த தேர்தலில் ராமநாதபுரத்தில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிக, பிரபலமான உதயசூரியனை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாகியது.

மேலும், கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றதையும் குறிப்பிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அதிக எழுத்தறிவு பெற்றோர், அரசியல் விழிப்புணர்வுள்ள தமிழ்நாட்டில் இன்னமும் சின்னத்தை மட்டுமே பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் முரணாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையேதான் கூடுதல் தொகுதிகளுடன் தனி சின்னம், அதே தொகுதி எண்ணிக்கையில் எங்கள் சின்னம் என்று கூட்டணித் தலைமைகளும் வலிறுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது. என்ன செய்யப் போகின்றன கட்சிகள்...?   

Tags :
Advertisement