"வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்ற வேண்டும்?" - இபிஎஸ் கேள்வி
"வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்ற வேண்டும் " என கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
" ஏற்கனவே சட்டப் பேரவையில் இந்த சட்ட முன்முடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்பதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்களாகியும் அனுமதிக்காத காரணத்தால் அதை திமுக அரசு சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள போதும் அவசர அவசரமாக ஆளுநர் நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளாக முதலமைச்சர் தனித் தீர்மானம் முன் மொழிந்துள்ளார். வழக்கு விரைவில் வர இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அவசர அவசரமாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதம் நடத்த என்ன காரணம்? சட்டமுன்வடிவுகள் காலதாமதம் ஆகியிருக்கிறது என்ற காரணத்தால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
ஏற்கனவே இந்த அரசு பல சட்ட முன்வடிகளை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் பல சட்ட முன் முடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. திமுக அரசு அதை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் சுய லாபத்திற்காக இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்ததாக பார்க்கிறோம்.
வழக்கில் திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்த சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது என்ன கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்
இரட்டை வேடம் போடுகின்ற ஒரே கட்சி திமுக தான். ஆளுகின்ற போது ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு நிலைப்பாடு. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. இந்த ஆட்சி எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2030-ல் இந்தியாவில் தமிழ்நாடு அடைய வேண்டி இலக்கை 2019லேயே உயர் கல்வி படிக்கும் எண்ணிக்கையை உயர்த்தி காட்டியது அதிமுக அரசாங்கம். நாங்கள் வெளிநடப்பு செய்து வந்த பிறகு சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகன் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என கூறுகிறார்.
நாங்களே பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டோம். அதன் பிறகும் எஙகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஏமாற்று வேலை. சிறுபான்மையினரின் பெயரை சொல்லி சொல்லி ஓட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அது இனிமேலும் முடியாது.
விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, போ தைப்பொருள் நடமாட்டம் இப்படிப்பட்ட நிலைமையில் இந்த ஆட்சி தொடர்கிறது. இந்த ஆட்சி வந்த பிறகு 10 ஆண்டுக்கு பிறகு வந்தவர்கள் நலத்திட்டங்கள் செய்வார்கள் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒரு திட்டமும் செய்யவில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு துறும்பைக்க கூட சிறுபான்மை மக்களுக்கு செய்யவில்லை” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.