For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அதிமுகவிற்கு துரோகம் செய்தால் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா தக்க தண்டனை கொடுக்கும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

09:03 PM Apr 05, 2024 IST | Web Editor
 அதிமுகவிற்கு துரோகம் செய்தால் எம்ஜிஆர்  ஜெயலலிதாவின் ஆன்மா தக்க தண்டனை கொடுக்கும்    எடப்பாடி பழனிசாமி பேச்சு
Advertisement

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா தக்க தண்டனையை தந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து இன்று (ஏப்.05) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, பொள்ளாச்சி.வி.ஜெயராமன், கருப்பண்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே. வி.ராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவசாமி, சத்தியபாமா, காளியப்பன் உட்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

" முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.  ஆனால் சிலர் அவர்கள் குடும்பத்திற்காக ஆட்சியை அமைத்துள்ளனர்.  அதுபோன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தலில் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.  திருப்பூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளராக அருணாச்சலம் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் மக்களோடு மக்களாக பணியாற்றியவர்.  மக்களின் பிரச்னையை புரிந்தவர்.  மத்தியில் கிடைக்கும் நன்மைகள் நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும்.  முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சின்னம் இரட்டை இலை.  திருப்பூர் தொகுதி வேட்பாளர் அருணாச்சலத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதாரத்தை திமுக தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார். அத்தனை அவதாரத்தையும் அதிமுக தவிடு பொடியாக்கியது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்பு பல்வேறு பிரச்னைகள் நடைபெற்றது.  அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் தக்க தண்டனையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா தந்துவிடும்."

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags :
Advertisement