மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் - 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!
மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 64 மழலையர் பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. இவற்றில் 25 பள்ளிகள் மட்டுமே பள்ளிக்கல்வித் துறையிடம் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. மீதமுள்ள 39 பள்ளிகள் எவ்வித அனுமதியும் பெறாமல் விதிமீறி இயங்கி வந்தது பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் 19 பள்ளிகள் இப்போது செயல்பாட்டில் இல்லை எனவும், மீதமுள்ள 20 பள்ளிகளுக்கு இரு முறை விளக்கம் கேட்டி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையும் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கடிதத்திற்கு விளக்கம் அளித்து, பள்ளிக்கான உரிமம் பெறாவிட்டால் 20 பள்ளிகளுக்கும் விரைவில் சீல் வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மழலையர் பள்ளியில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மதுரையில் இவ்வளவு மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.